Thursday, June 2, 2022

உணர்ச்சிகளின் மேகமூட்டம்

எங்கேயும் அவனே 
என்ற போதனை  
காது வழியே வழிந்து மனதில் 
விழும், எழும் யோசனை 

என் உள்ளிலும் 
அவன் உண்டோ 
இங்கேயும் அவனை 
இந்தக் கண்கள் கண்டோ 

Friday, December 3, 2021

குப்பைத்தொட்டி

பெரிய மாளிகையாக இருக்கட்டும், அல்லது ஒரு சிறிய குடிசை. குப்பைத்தொட்டி இல்லாத வீடு இருக்க முடியுமா? தினம் வீட்டைப் பெருக்கி முடித்தபின் குப்பை அள்ளிப் போடுவதற்காக ஒரு பழைய பக்கெட்டாவது ஒரு மூலையில் வைத்திருக்கப்படும்.  அவ்வப்பொழுது வரும் காகிதக் குப்பைகள், சுழலும் முடி, ஒட்டடை போன்ற இதர குப்பைகள் வேறு! போடுவதற்கு இடம் வேண்டுமே.

பார்க்கப்போனால், இப்பொழுதெல்லாம் நம் சுற்றுச் சூழலைக் காப்பதற்காக மக்கும் குப்பை, மக்காத குப்பை என்றும் பிரிக்கப் படுகிறது.

Saturday, October 9, 2021

புடை சூழ

"வேலைய விட போறயா?" சாந்தி ஆச்சர்யத்துடன் கேட்டாள்.

ஆம் என்று கவிதா தலையாட்டினாள்.

"ஏண்டி, இந்த மாதிரி வேலையும் சம்பளமும் மறுபடியும் கிடைக்குமா?"

கவிதா தெரியாது என்பதைக் குறிக்க தோள்களைக் குலுக்கினாள்.

Monday, May 24, 2021

பை சிநேகம்

"சுஜாதாவின் கதைகள் ஏதாவது இருக்கிறதா?" என்று கவினின் போனில் மெசேஜ் வந்தது. எதிர் வீட்டு மாயா அனுப்பியிருந்தாள். 

"இருந்தது, ஆனால் இப்ப இல்லை. யாரிடமோ கொடுத்தேன். இப்ப கோவிட் லாக்டவுனில் அதுவும் மாட்டிக்கொண்டது," என்று பதில் போட்டாள்.

சிரிப்பு ஸ்மைலி பதிலாக வந்தது. "என்னிடம் ஜெயகாந்தனுடைய ஒரு புத்தகம் இருக்கு, வேணுமா?"

"ஓ, யெஸ்! லைப்ரரி போக முடியாமல் தவிக்கிறேன்," என்று கவின் பதில் போட்டாள்.

"சரி, அனுப்புகிறேன். என் தோட்டத்தில் மனத்தக்காளி கீரை நிறைய இருக்கு. வேணுமா?'

"வாவ்! தேங்க்ஸ்! நிச்சயமா!"

மாயாவை பரிச்சயமே தவிர கவினும் அவளும் அதிகம் சந்தித்தது இல்லை. ஒரே காலனியில் இருப்பதால் அவ்வப்பொழுது பொதுவாக சந்தித்ததுண்டு, ஒருவரைப்பற்றி ஒருவர் ஓரளவுக்கு அறிந்திருந்தார்கள். புத்தகம் படிக்கும் பழக்கம் இருப்பது தெரியும். "வேறு என்னவெல்லாம் இருக்கு? என்கிட்டே சில ஆங்கில புத்தகங்கள் இருக்கு. ஹென்றி ஜேம்ஸ், கார்சியா, ஓ, இப்போ புதுசா வந்த சில எழுத்தாளர்கள்..."

"தாங்கப்பா! இந்த லாக்டவுன்லே இருக்கற புக் எல்லாம் படிச்சாச்சு."

"டன்."

சற்று நேரத்தில், "பாக்கில் புக்கும் கீரையும் இருக்கு."

கவின் கதவருகே போய் பார்த்தாள். அங்கு ஒரு அழகான கைப்பை இருந்தது. குதூகலத்துடன் அதை எடுத்துக்கொண்டு உள்ளே வந்தாள். அதிலிருந்ததை வெளியே எடுத்து வைத்து, அதில் தான் கொடுக்க நினைத்த புத்தகங்களை வைத்து மாயாவின் வீட்டு வாசலில் வைத்தாள். "வைத்துவிட்டேன்," என்று பதில் அனுப்பினாள்.

எத்தனை பொருள்கள் கை, இல்லை பை, மாறின. சில சமயம் ஒன்றும் சொல்லாமல் தோட்டத்தில் காய்த்த காய் கனிகள் வரும். அதற்கு பதிலாக பலகாரங்கள் போகும்.

வாட்ஸாப்பில் காய் வளர்க்கும் குறிப்புகள் வரும். கவின் தன்னிடம் இருந்த சில தொட்டிகளில் தக்காளி, மிளகாய், வெங்காயம் என்று வளர்க்க ஆரம்பித்தாள். பதிலுக்கு பலகார குறிப்புகளை பகிர்ந்துகொண்டாள். அதை செய்து மாயா படங்களை அனுப்புவாள். "நீ செய்த அளவுக்கு சுவையா இல்லை, ஆனால் எல்லாருக்கும் பிடிச்சிருந்தது."

"கொரோனா காலத்துல இந்த பரிமாற்றம் தேவையா?" என்று கணவன் செந்தில் முகம் சுளித்தான். 

 "பையோட வைரஸ் அனுப்பப்போறாளா?' என்று இவள் பதிலுக்குக் கேட்டு, அடுத்ததென்ன வரும் என்று காத்திருந்தாள்.

திடீரென்று மெசேஜ் காணாமல் போயின.

"மாயா கொரோனா பாசிட்டிவ்," என்ற செய்தி வாட்சாப் குரூப்பில் பரவியது. உயிருக்குப் போராடுகிறாள் என்ற செய்தியும் கூடவே வந்தது.

கவின் அதிர்ச்சியடைந்தாள். தினம் ஒரு முறையாவ து சாட் செய்வார்கள், வாரத்துக்கு இருமுறையாவது அந்தப் பை இங்கைக்கும் அங்கைக்கும் அலையும். இப்பொழுது அந்தப் பை கவினிடம் தான் இருந்தது. "நான் அவர்கள் குடும்பத்துக்கு உணவு அனுப்புகிறேன்," என்று அவள் முன் வந்தாள். 

இப்போதெல்லாம் வெறும் பைதான் திரும்பி வந்தது. மாயாவுடைய கணவன் அருளிடமிருந்து தான் செய்திகளை சேகரிக்க முடிந்தது, ஆனால் அவனுக்கே அதிகம் தெரியவில்லை. 

தனியாகவும், காலனியிலிருக்கும் மற்றவர்களுடனும் சேர்ந்து பிரார்த்தனை செய்தாள். அதிகம் பழக்கமே இல்லாத ஒருவருடன் இவ்வளவு அன்பு பிறந்தது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அந்தப் பை வெறிச்சென்று அவள் முகத்தைப் பார்க்கும் போது அவளுக்கு கண்களில் நீர் ததும்பியது. "கெட் வெல் சூன், மாயா," என்று அடிக்கடி முணுமுணுத்தாள்.

"மாயா இன்று டிஸ்சார்ஜ் ஆகிறாள்," என்று அருள் சொன்னான். அந்தப்பையில் மாயாவுக்காக என்ன அனுப்புவது என்று தவித்தாள் கவின். வீட்டில் காய்த்த தக்காளி மற்றும் வெங்காயம் வைத்து, "நன்றி," என்று ஒரு காகிதத்தில் எழுதி அத்துடன் வைத்து அவர்கள் வீட்டு வாசலில் வைத்தாள்.

ஆனால் மாயா வீட்டுக்கு வரவில்லை. இந்த பூமியில் அவளுடைய பயணம் முடிந்துவிட்டது போல. அந்தப் பை திரும்பி வந்தது, இவள் வைத்திருந்த தக்காளி வெங்காயத்துடன்.




Sunday, October 11, 2020

மௌனக் கடல்

எங்கும் ஒரே சத்தம் 
அமைதியைத் தேடும் 
இந்த சித்தம் 

வாய் பேசுவது மட்டுமில்லை 
எழுத்துக்களாலும்  
ஏற்படும் சஞ்சலம் 

Saturday, September 19, 2020

ஆசை

கேள்விகளே இல்லை 
கேள்விகள் கேட்க ஆசை 

தேடி கிடைக்கவில்லை 
தோண்டி எடுத்து தெரிந்துகொள்ள ஆசை

Sunday, July 26, 2020

பதில்தான் என்ன?

வீடு வரை மனைவி வீதி வரை உறவு காடு வரை பிள்ளை கடைசிவரை யாரோ உயிருக்கும் மேலான மனைவியோ சதைக்குச் சதையான பிள்ளைகளோ அன்பிற்குரிய உடன் பிறந்தவர்களோ நேசமுடைய பந்து சகாக்களோ எவரிடமும் விடைப்பெற்றுக்கொள்ளாமல் போனால் போதும் என்று ஓடவைக்கும் சென்ற பின்னும் ஒதுக்கி வைக்கும் உன் நோக்கம்தான் என்ன? வாழ்வே மாயம் என்று அறிந்த அறிவை மீண்டும் அறிய வைக்க இதுவும் ஒரு முறையா? இது உனக்குத் தகுமா? அன்பே வடிவமாகி அறவணைப்புடன் வாழ்ந்த ஒருவரை நீ தனியாக வந்தாய், தனியாகப் போ என்று அனுப்பிவைக்கும் காரணம்தான் என்ன? போகும் நேரம் வந்தது, அழைத்துச் செல் பக்கத்தில் இருப்பவர்களால் தடுக்க முடியுமா என்ன? எங்கள் அன்பு உன்னையே கலங்க வைக்கும் என்று நீ அஞ்சி இப்படிச் செய்கிறாய், இல்லை? அபிமன்யுவைத் தனியாகச் சூழும் கௌரவர்களைப் போல் கொரோனாவைச் சூழச் செய்து எங்களை விலக்கிய உன் மீது எழும் கோபம் உன்னையே எறிக்க இன்னும் எத்தனைச் சோதனைகள்? இன்னும் ஏன் தாக்குகிறாய்? அமைதி, அமைதி, சற்று பொறு எங்களை நிம்மதி மூச்சு எடுக்க விடு.